Sunday, November 19, 2006

கல்யாண சாப்பாடு

வீட்டு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு பேப்பர் திருத்திக்கொண்டிருந்த வாத்தியார் குரல் கொடுத்தார்.

"அரசு யாருனு பாருடா"

"ஏபி சார் இருக்காரா?"

"அப்பா ஒரு அக்கா ஒன்னை தேடிக்கினு வந்திருக்கு "

"வாம்மா.... உள்ள வா, என்ன இந்த நேரத்துல" கையிலிருந்த குங்குமச்சிமிழை பார்த்து சமையலறை பக்கம் திரும்பி குரல் கொடுத்தார்

"ஏ சுந்தரா இங்க வாயேன்"

அருகில் வந்த மனைவியிடம்

"சுந்தரா இந்த பொண்ணு காயத்திரி, எங்க ஸ்கூல்ல டைப்பிஸ்ட்டா இருக்குனு சொல்லியிருக்கனே அந்த பொண்ணு"

"வாம்மா வா வா, ஆறுமுகம் சார் ஊட்டுக்கு பக்கத்துல தான இருக்க" கேட்டுக்கினே காயத்ரி நீட்டிய குங்குமச்சிமிழிலிருந்து குங்குமம் எடுத்து நெத்தியில வச்சிக்கிட்டாங்க.

"ஆமாங்க, சார் எனக்கு மேரேஜ் அடுத்த நாயித்து கெழமை, திருவந்திபுரம் கோயில்ல, ஏழரை ஒம்போது வந்துடுங்க சார்"

"சரிமா, கண்டிப்பா வரேன்" சொன்னவர் காயத்ரி நீட்டப்போகும் பத்திரிக்கைக்காக காத்திருந்தார்.

"சரி சார் நான் போயிட்டு வரேன் கண்டிப்பா வந்துருங்க, இன்னும் பி.கே. சார் வீட்டுக்கு போகனும்"

"இந்த இருட்டுல எப்படிம போவ?"

"தம்பி கூட வந்துருக்கான் சார், வெளியில நிக்கறான்"

"அட என்னமா உள்ள கூப்புடு"

போனவாட்டி அண்ணாமலை யுனிவர்சிட்டி டிஸ்டன்ஸ் எஜிகேஷன் பி.லிட்டுக்கு பழைய புக் வாங்க வந்தப்ப போட்டுக்குனு வந்த அதே சாயம் போன மஞ்சகலர் சட்டையே இப்பயும் போட்டுகின வந்ததை கவுனிச்சிக்கிட்டே

"என்ன தம்பி பி.லிட் முடிச்சிட்டியா?"

"அடுத்த வருசத்தோட முடியுது சார்"

"சரி புஸ்தகம் வேணும்னா கேளு தரேன்" அதே வெளுத்து போன மஞ்ச கலர் சட்டைய பார்த்த ஒடனே, போன வாட்டி இழுத்தடிச்சி புஸ்தகம் தந்தது போல இந்த வாட்டி செய்யாம ஒடனே புஸ்தகம் தரணும்னு நெனச்சிக்கிட்டார்.

ரெண்டு பேரும் கெளம்பி போன அப்புறம்

"என்னங்க அந்த பொண்ணு பத்திரிக்கை தரலை போல"

"ம்... அதுக்கு எவ்ளோ கஷ்டமோ, பத்திரிக்கை அடிக்கலியோ என்னமோ, பாவம் அது கல்யாணத்துக்கு அதுவே வந்து சொல்லிட்டு போவுது"

"என்னாங்க பத்திரிக்கை கூடவா அடிக்க கூடாது"

"அவுங்க ஊட்ட எல்லாம் இந்த பொண்ணுதான் பாத்துக்குது, டெம்ப்ரரி ஸ்டாப்புக்கு என்னா மாசம் ஒரு நானூரு கெடைக்கும், அது தம்பி எங்கியோ கடையில கணக்கெழுதறான், கோயில்ல கல்யாணம் வச்சா கூட ஒரு அய்யாயிரமாவது ஆவும், என்னா செய்யுதோ பாவம்"

"சுந்தரா இந்தா அந்த கல்யாணத்தை காலண்டர் பின்னாடி குறிச்சி வை"

மேசைமேல கெடந்த பத்திரிக்கையை பாத்துகிட்டே
"ஆமாம் அடுத்த நாயித்து கெழமை தானே சர்வேயர் சின்னசாமி பொண்ணு மஞ்சத்தண்ணி"

"அய்யோ ஆமாங்க அதுவும் ஒம்போது பத்தரை தாங்க"

"சரி நீ சர்வேயர் ஊட்டுக்கு போயிட்டுவா, நான் இங்க போறேன்"
--------------------------------------------------------------------

ஆறுமுகம் சாரோட சேந்து பால்குக்கர் வாங்கலாம்னு நெனச்சி அப்பறம் அட வுடுசார் கூட நூறு ரூவா போனாலும் எதுனா உபயோகமா வாங்கித்தரலாம்னு ஆறுமுகம் சாரோட பேசி அவரு (எவர்)சில்வர்டபரா தட்டு செட்டு வாங்க இவர் மண்ணெண்னெய் பம்பு ஸ்டவ்வு வாங்கிக்கிட்டு கல்யாணத்துக்கு கெளம்புனாரு.

"வாத்தியாரம்மா கெளம்பிட்டிங்களா மஞ்சத்தண்ணிக்கு" கொரல் குடுத்துக்கிட்டே வந்துச்சி மொத ஊட்டு சாந்தி.

லைன்ல இருந்த மூனு ஊட்டுகாரங்களும் சேந்து வாங்குன வெள்ளி குங்குமச்சிமிழை கையில எடுத்துகுனு பொடவையை நீவி உட்டுக்கிட்டு "தோ கெளம்பிட்டன்" னு கொரல் குடுத்துக்கிட்டே வெளியே வந்து சாந்தியோடு சேந்து சர்வேயர் ஊட்டுக்கு போவ ஆரம்பிச்சாங்க.

"அது என்னாப்பா மஞ்சத்தண்ணியை காலங்காத்தாலே வச்சிருக்கங்க"

"ஆலிஞ்ச ரேடியோ சாந்தியை கேட்டா தான் தெரியும், அவள கேளுங்க"

"அது மத்தியானத்துக்கு ஃபாதர் வந்து ஏதோ செபம் வக்கிறாங்களாம், அதான் அதுக்கு முன்னாடியே மஞ்ச சுத்துறாங்க"

ஊட்டு வாசல்லயே நின்னு எல்லாரையும் வரவேத்துக்கிட்டிருந்த சர்வேயரை இவங்களை பாத்து வாங்க வாங்கனு வரவேத்தப்ப
ஒரு பர்லாங்கு தூரம் சீக்கிரம் நடந்து வந்துட்டாலும் கொஞ்சம் படபடப்பா வந்ததை காமிச்சிக்காம சிரிச்சிக்கிட்டே சர்வேயர் வீட்டுக்குள்ள நொழஞ்சாங்க.

'மேரி'க்கு நலங்கு வைச்சிட்டு சீப்பு வாழப்பழம் வெத்தலை பாக்கு தாம்பூலத்தை எடுத்துக்கிட்டு மணியக்காரர் வீட்டுக்காரங்களோட பேசிட்டு வெளியே வந்தப்ப சர்வேயர் சின்னசாமி முன்னால போனவங்க கிட்ட சாப்ட்டுட்டு தான் போவனும்னு வற்புறுத்தியவர் இவங்களை பாத்து வாயெடுத்து முழுசும் வார்த்த வராம அவுரு தொண்டையிலயே வார்த்த சிக்கிக்கிட்டுது.

பக்கத்துல நின்னுக்கிட்டுர்ந்த அவரு பொண்டாட்டிக்கிட்ட சாப்பாடு எங்கமானு கேட்டவுடனே

"பக்கத்துலதான் வாத்தியாரம்மா நீங்க வாங்க" சர்வேயர் கூப்புட தயங்கி தயங்கி நின்ன மொத ஊட்டு சாந்திய பாத்து "நீங்களும் வாங்கமா, வாங்க" கையோடு கூப்டுக்கிட்டு போயி "இந்தாம்ம செம்பு, கைகழுவிட்டு வாங்க" சர்வேயர் சொன்ன நேரத்துல சாந்தியும் கூடவந்தவங்களும் நமுட்டு சிரிப்பு சிரிச்சிக்கிட்டாங்க.

அரைகொற சாப்பட்டோட சாந்தியும் மத்தவங்களும் ஏந்திரிச்சி கைகழுவிட்டு போக, பாதரை கூப்புட்டு வர இருந்த காருல இவங்களை ஊட்டுல எறக்கி உட சொன்னார்.

ஊட்டுக்கு வந்து எறங்க காத்துருந்த மாரி சாந்தி மொள மொளனு புடிச்சிக்கிச்சி

"இந்த வாத்தியாரம்மா கூட போனலே இப்பிடிதான் எங்கள மாட்டி உட்டுருச்சி, அவுங்க ஊட்ல யாராவது சாப்புடுவாங்களா?"

"ஏன் சாப்புட்டா என்ன?"

"நீங்க வேணா பறசனங்க ஊட்ல சாப்புடுங்க, ஆனா எங்களை மாட்டிவுடாதிங்க"

"ஏய் சாந்தி கொழுப்பை பாரு, பள்ளி சாதியில பொறந்ததுக்கே ஒனக்கு இம்மாம் திமிரு, பாப்பாத்தியா பொறந்திருந்தா என்னா கொழுப்பு இருக்கும் ஒனக்கு, ஒன்னு தெரியுமா, அவங்க புள்ளைங்க சாதி சர்ட்டிகேட்ல கூட கிறிஸ்டின்னுதான் போட்டாங்களாம், அவரு பொண்டாட்டி ஒரு நாள் சொல்லிட்டு போச்சு இந்த காலத்துல இப்படியும் இருக்காரே இவரு, இப்போ கெவருமண்ட்டு சலுகை எதுவும் கெடக்காது அப்படினு பொலம்புச்சி அந்த பொம்பளை"

"அது என்னமோ வாத்தியாரம்மா, இம்மாம் சொல்றியே, அந்த சர்வேயர் பறசன பேச்சு மாறுச்சா பாத்தியா 'செம்பு' எடுவாம் செம்பு"

லைன் மொனையில சைக்கிளை தள்ளிக்கிட்டு வர்ற வாத்தியாரை பாத்த சாந்தி

"வாத்தியாரம்மா வாத்தியார் வந்துட்டாரு, நாங்க கெளம்புறோம்"

பைப்படியில மொகம்,கை,கால் கழுவிட்டு உள்ள வந்த வாத்தியார்

"சுந்தரா சாப்பாடு போடு"

"என்னங்க சாப்புடலையா? அயிரு ஊட்டு கல்யாணத்துக்கு போயி சாப்புடாமலா வந்திங்க"

"அந்த பொண்ணு சாப்புட்டு போவத்தான் சொன்னுச்சி, அது தம்பியை கூட அனுப்புச்சி, ஆனா நாந்தான் எவ்ளோ கஷ்டத்துல கல்யாணம் பண்ணுது , எப்பிடியும் ஒரு அஞ்சாயிரம் கல்யாணத்துக்கு செலவு செஞ்சிருக்கும், எத்தினி சாப்பாட்டுக்கு யாராருக்கு சொல்லுச்சோனு சாப்புடறன்னு சொல்லிட்டு வந்துட்டேன்"

"சரி இருங்க உப்புமா கிண்டறேன்" சமயலறைக்கு போனாங்க வாத்தியாரம்மா.

4 Comments:

Blogger We The People said...

இரு பக்கமும் அலசிய கதை. நான் சந்தித்த பல கேரக்டர்கள் இங்கே பார்க்கமுடிகிறது... அடுத்த கதை மிடில் லேயரை அலசுமா??

3:15 AM  
Blogger நியோ / neo said...

இதிலே முக்கியமான விசயம் இந்த மாதிரியான இயல்பான குறுக்குவெட்டுத் தோற்றங்களையெல்லாம் பதிவு செய்வதுதான்னு நினைக்கிறேன். ஊடறுத்து உள்ளே பார்ப்பது.

எல்லாருக்கும் வராது - தொடர்ந்து செய்யுங்க குழலி முடியும்போதெல்லாம். :)

12:47 PM  
Blogger வெட்டிப்பயல் said...

நல்ல கதை... இதை போல் நானும் பார்த்திருக்கிறேன்!!!

2:36 PM  
Blogger Ramesh DGI said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News

12:42 AM  

Post a Comment

<< Home