Sunday, November 19, 2006

கொஞ்சம் திரும்பி பார்க்கலாம்

சென்ற ஆண்டு இதே நவம்பர் மாதத்தில் ஒரு முயற்சி ஒரு வேண்டுகோள் என்ற பதிவில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன்.

வட மாவட்டத்தின், முக்கியமாக இந்த இரு சமூகங்களின் சமூக,வாழ்க்கை,அரசியல், வரலாற்று
நிகழ்வுகள் பற்றி ஒரு எழுத்து பதியப்பட வேண்டுமென ஆசைப்படுகின்றேன், அது கடந்த 30
ஆண்டுகால வட மாவட்ட நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்தும், அதற்கு முந்தைய 30
ஆண்டுகளைப் பற்றிய நிகழ்வுகளை பதிந்தும் அதற்கும் முந்தைய காலகட்டதை லேசாக தொட்டும்
இருக்கலாம், சரி தவறு என தீர்ப்பளிக்காமல் , வடுக்களை கீறாமல் தடவி கொடுத்தும்,
நேரடி அனுபவங்கள், பிறரின் அனுபவங்கள், சில வடமாவட்ட அரசியல் பிரமுகர்களின்
பேட்டிகளையும் இணைக்கலாம், ஆனால் இது அத்தனையும் ஒரு தனிமனிதனால் செய்வது மிகக்
கடினமான ஒன்று மேலும் தனி மனிதனால் செய்யப்படும் போது நிச்சயம் முழுமை பெறாது
மேலும் தனி மனிதன் பார்வையிலேயே இருக்கும், இது நிறைய உழைப்பை சாப்பிடும் வேலை,
மேலும் தனி மனிதனால் இத்தனையும் சிறப்பாக செய்ய முடியாது, எனவே இதற்கு நண்பர்களின்
கூட்டு முயற்சியையும் பங்களிப்பையும் வேண்டுகின்றேன், நிச்சயம் இது சில நாட்களிலோ
சில மாதங்களிளோ முடிவுறுவதாக இருக்காது, சில வருடங்கள் கூட ஆகலாம் (நாமெல்லாம் முழு
நேரமாக இதை செய்வதில்லை, ஓய்வு நேரங்களில் மட்டுமே செய்கின்றோம்) தகவல் திரட்டுவது
இதில் மிகப்பெரிய வேலையாக அமையும், உங்களுடைய ஆலோசனைகள், கருத்துகள்,அறிவுரைகள்,
விமர்சனங்கள், கேள்விகள் முக்கியமாக வடமாவட்ட சூழலை அதிகம் அறியாதவர்கள் கேட்கும்
கேள்விகள் இந்த பதிவுகள் எதை நோக்கி செல்ல வேண்டும் என்பதற்கு உதவியாக இருக்கும்
இதற்காக தனியாக வலைப்பதிவு கூட தொடங்கலாம், இவை அனைத்தும் இன்னமும் எண்ண வடிவிலேயே
இருக்கின்றது, பங்களிப்பு செய்ய விரும்பும் உள்ளங்களுடன் ஆலோசித்து பின் எப்படி
செல்ல வேண்டும் எப்படி செய்ய வேண்டுமென முடிவெடுக்கலாம்.

இந்த முயற்சியை தொடர்ந்து கொண்டிருந்த போதும் வெளிநாட்டில் இருந்து கொண்டு இப்படியான ஒரு முயற்சியை தொடருவதில் பல சிரமங்கள் இருந்தது புரிந்தது, வெறும் இணைய தகவல்களையும் புத்தகங்களையும் மட்டும் நம்பி இந்த முயற்சி இல்லை, முடிந்த அளவிற்கு பெரியவர்களுடன் பேசி தகவல்கள் சேகரிக்கிறேன், ஊருக்கு வரும் சில நாட்களில் மிகப்பெரியதாக ஒன்றும் திரட்ட முடியவில்லை என்றாலும் கொஞ்சம் தகவல்கள் திரட்டியிருக்கின்றேன், என் அம்மா,அப்பா என்னுடன் சிங்கையில் இருந்த மூன்று மாதங்களில் நிறைய பேசினோம் அதுவும் இந்த முயற்சிக்கு பெரும் உதவியாக இருக்கும், வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்த முயற்சி கைகூடுமென்று எனக்கு இப்போதைக்கு தோன்றவில்லை, ஆதலால் நான் பார்த்த சூழலை, கேட்ட விசயங்களை குறிப்பாக வெகுசன ஊடகங்களில் தொடப்படாத இந்த மக்களின் வாழ்க்கை சம்பவங்களை என் கற்பனைகளை கொஞ்சம் கலந்து, கொஞ்சம் கூட்டல் குறைத்தல்களோடு கதைகளாகவும் கட்டுரையாகவும் தர முயற்சிக்கிறேன்.

தங்கர்பச்சானின் குடிமுந்திரியும், சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதையும் இப்படியான ஒரு கதைமுயற்சிக்கு முன்மாதிரியாக இருந்தன.

1 Comments:

Blogger rmkgreat said...

குழலி நன்றி
உங்கள் பக்கங்கள்
புரட்சி யுத்தங்கள் !

5:43 PM  

Post a Comment

<< Home